Saturday, January 12, 2019

CURRENT STATUS STREET DOGS | தெரு நாய்களின் தற்போதைய நிலை அன்பால்வீழ்ந்தவிலங்கினம்_நாய்!



அன்பால்வீழ்ந்தவிலங்கினம்-நாய்!



ஏன் தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது..?

இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவை தானே தேடிக்கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.

ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள் இலை தலைகள் தங்களை வழங்கிவிடுகிறது.ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால்தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.?

உங்கள் வீட்டில் மனக்க மனக்க சமையல் தயாராகிகொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றி சுற்றி ஏன் வருகிறது??வீட்டிற்க்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..?

சாலையோர கடையிலோ தள்ளு வண்டிகடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லை தவிற வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..?

குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்க்கு மனிதகுலம் இடம்பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்குகி வேளாண்மை செய்து தனக்கான உணவை தானே உற்பத்திசெய்கிறது. குகையில் வாழ்ந்து பழகியவன் வீடுகட்டி வாழ பழகுகிறான். சிந்து சமவெளி மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை, அறிவியல், குற்ற வளர்ச்சியில் உச்சத்தை எட்டிவிட்டான்.

தெருநாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்.
சொல்கிறேன்….

ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும்போதும் அவன் மட்டும் வரவில்லை.தனக்கு பயன்படகூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகலான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.

அவற்றுள் முதன்மையான விலங்கினம் நாய்”.”ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.


நரி, ஓநாய், செந்நாய் குடும்பவகையை சேர்ந்தது தான் நாயும். அவற்றை போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்குதான். அவைகளுக்கு இருந்த எல்லா குணமும் நாய்க்கும் இருந்தது. ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அதுதான் நாயை இன்று தெருவில் அலையவிட்டிருக்கிறது. அதுதான் அன்பும் நன்றியுணர்வும்….. அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்

ஏன் தெரு மாடுகள் இல்லை?
ஏன் தெரு ஆடுகள் இல்லை?
ஏன் தெரு கோழிகள் இல்லை?
ஏன் தெரு பன்றிகள் இல்லை?
ஏன் தெரு நாய்கள்மட்டும் உள்ளது?
ஆடு மாடுகளின் காம உணர்வு மதிக்கப்படுமளவிற்க்கு நாய்களின் காம உணர்வு ஏன் மதிக்கப்படாமல் இழிவுபடுத்தப்படுகிறது? ஏன்?????….. .

ஆடுகளின் இறைச்சியும் மாட்டு பாலும் கோழி முட்டை மற்றும் இறைச்சியும் ஆதிகாலம் முதல் இன்றுவரை மனிதகுலத்திற்க்கு தேவைப்படுகிறது. மிகப்பெறிய சந்தையாகவே உருவெடுத்திருக்கிறது.

எலிதொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலிதான். ஆனால், அன்பை தவிற வேறு எதியுமே கொடுக்க முடியாததால் கைவிடப்பட்டு தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்றுவிட்டது.

வேளான்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூணை போன்றவற்றை மனிதன் வேட்டையாடி பொழுதுபோக்கிற்காக நாய் தேவைப்பட்டது. இன்று வேளாண் செய்வதே போராட்டமாகவும் மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன், காவிரி உரிமை என போராட்டமே வேளாண்குடிகளுக்கு பொழுதுபோக்காக ஆகிவிட்டது.

வீட்டை காவல் காக்கும் இடத்தை சீ.சீ.டீவிகள் (CCTV) நிரப்பியதால் வீட்டின் மதிப்பிற்கேற்ப்ப சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும் சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது. பல நாய்களுக்கு தெருவே வீடாகி போனது.

மனிதன் social animal (சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகிவிட்டது. உங்களோடு அதற்கு பேச மட்டும் தான் தெரியாது. உங்கள் மொழியை புரிந்து கொள்ளும்,. நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ளும்,. உங்கள் நண்பர் யார் பகைவர் யார் என தெரியும்,. உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்ட தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்,….அவ்,…அவ்,…என சிணுங்கத்தெரியும்.

உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பி தாக்காமல் விளையாட்டு காட்ட தெரியும். உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்து திட்டுவாங்கியிருக்கும் ஆனால் அவள் திருமணமாகி சென்றுவிட்டால் மூலையில் படுத்து கவலைப்படும்.

வெளியூருக்கு போய் வந்த நம் அப்பாவை பார்ததும் முன்னங்கால்களை தூக்கி மாரில் வைத்து தாடையை நக்கும். வாலை ஆட்டிக்கொண்டு மளிகை கடைக்கு அம்மாவோடு கூடவே போய்ட்டு வரும். உங்களுக்கு யாரின் மூலமாவதும் தீங்கா?.. ஒரு கை பார்த்துவிடும். இவை அத்தனையையும் செய்ய அடைக்களமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை.

அப்போ, வீடு இல்லாத நாய்களின் நிலை???

வீடு கிடைத்தவை செல்லப்பிராணியாகி விடுகிறது. வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை என பார்க்க படுகிறது. பார்க்கும் இடமெல்லாம் கல்லடி படுகிறது.
தெருநாய்கள் அடிவாங்குவதற்காககவும் வண்டியில் அடிபட்டு சாகவும் படைக்கப்பட்டதாக பார்க்கப் படுகிறது. பெரிய நாய் தெருவில் அடிபட்டு சாக, நாய்குட்டிகள் அதை தேடி அலைந்துகொண்டேயிருக்கும்.

தெருவில் அலைந்து அலைந்து
வியர்வையை விட இரத்தமே அதன் உடம்பின்மீது வழிகிறது. உணவுக்கு வழியின்றி பசியில் ஏங்கி ஏங்கி எச்சிலே அதற்க்கு இரத்தமாக உடம்பில் ஓடுகிறது.

இது அத்தனையும் நடந்து கொண்டிருக்கும் அதே தெருவில் காட்டிலிருந்து அது நம்பி வந்த மனிதகுலம் எந்த சம்மந்தமும் இல்லாமல் பரபரப்பாக போய்கொண்டிருக்கும். அவர்களுக்கு ஏறெடுத்து பார்க்கக் கூட நேரமில்லை என்பதை விட ஏறெடுத்து பார்த்தாலும் அலட்சியமே மறுமொழியாக இருக்கும் என்பதை உணரும் தெருநாயின் நிலை என்னவாக இருக்கும்?..

ஒரு விலங்கை வேறோடு இடம் பெயர்த்து அடியோடு அதன் குணத்தை உணவு முறையை மாற்றி வைத்தது யார் தவறு?.. அதற்கும் மாட்டுப் பாலுக்கும் என்ன சம்மந்தம்?. அதை அவைளுக்கு உணவாக கொடுத்தது யார்??.. தற்போது அவைகளுக்கு அதை தர மறுப்பது யார்??

ஆனா பாருங்க நன்றி கெட்ட நாய் என்ற சொல்லாடலை நாம்வைத்திருக்கிறோம். என்ன ஒரு முரண்?அவைகளுக்கு ஆதரவா இருக்க வேண்டியது யார் கடமை?.. சுற்றுலாவிற்க்கு செல்லும்போது அங்குள்ள விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என சொல்வது இதற்காகத்தான்.

தெருநாய்களால் இன்று காட்டிற்கு சென்று வாழவும் முடியாது. நாட்டிற்க்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்துகொள்ளவும் தெரியாது.
அதனால்தான் நீங்கள் சாப்பிடும்போதும் தெருவில் நின்று உங்கள் தட்டையே வெறித்து பார்த்து நாக்கை தொங்க போட்டுக்கொண்டிருக்கிறது. அதன் நாக்கில் இருந்து சொட்டச்சொட்ட வழிவது எச்சில் அல்ல. கைவிடப்பட்ட ஓர் விலங்கின் கண்ணீர். உங்கள் உணவை பரிமாறி அதை துடையுங்கள்.

இங்கு உனக்கு மடிக்கணிணி, மிக்சி, கிரைன்டர் தருகிறவர்கள் அதிகாரத்தில் அமர்தப்படுவது ஒழிந்து சிட்டுக்குருவிக்கும் மைனாவுக்கும் காக்கைக்கும் நாய்க்கும் பூனைக்கும் அணிலுக்கும் ஆடு மாடு கோழி வண்டு தேனீக்களுக்கும் சிங்கம் புலி கரடி யானை மானுக்குமான தேவையை நிறைவேற்றும் அரசியலை செய்ய விரும்புகிறவர்கள் அதிகாரத்தில் அமர்த்தபடுவது ஒன்றுதான் இந்த துயர்களை எல்லாம் துடைக்கும். அனைத்து உயிரினங்களுக்கும் சேர்ந்ததுதான் இந்த பூமி. அரசியல் அனைத்து உயிரிகளுக்குமானது.


நன்றி ஆக்கம்: வருண் சுப்ரமணியம்,

2 comments:

  1. This new information every we are see the dogs on road side this is the on other side of dogs life but same time rabies virus from dogs. Now days this is also public disturbance, Foreign countries regulate this kind of street animals.

    ReplyDelete
  2. நாய்கள் பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள்

    ReplyDelete

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...