வாடகை வீடு
வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வேலை நிமித்தமாகவோ,
படிப்பு நிமித்தமாகவோ,
தொழில் நிமித்தமாகவோ,
பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். எனினும் அவ்வாறு செல்லும் இடங்களில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இந்தத் தேவைகளை நன்கு உணர்ந்த வீடுகளுக்குச் சொந்தக்காரரான முதலாளிகள் இதுதான் சம்பாதிக்க சிறந்த வழி என்று கருதி தாங்கள் நினைத்தபடி வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகை , குடிநீர் தொகை , வீட்டைத் துடைப்பவருக்கான தொகை , வீட்டுக் காவலர் தொகை, இப்படி இன்னும் புதிது புதிதான தொகைகளைக் கண்டுபிடித்து வாடகைக்கு வரும் குடும்பத்தினரிடம் வசூலித்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் வாடகைக்கு வீடு பிடிப்பதென்பது குதிரைக்கொம்பான செயலாகும். சென்னையில் வாடகை வீடுகளின் வாடகைப் பணத்தை உயர்த்திய பெருமை தொழில் நுட்பத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்களையே சாரும். இது ஒரு புறம் இருக்க வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தரும் தரகர்களின் கொடுமை அதற்கு மேல். ஒரு வீடு வாடகைக்கு இவர்கள் எடுத்துக் கொடுத்தால், நம் அந்த வீட்டுக்குக் கொடுக்கும் ஒருமாத வாடகையை இவருக்கு கொடுக்க வேண்டும் என்பது தரகர்களின் எழுதப்படாத சட்டம். ஆதலால் இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய காரணத்தால், தற்போது வீட்டுக்குச் சொந்தக்காரரும், வாடகைக்கு வரும் குடும்பத்தினரும் வீட்டு வாடகைச் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
- குடித்தனக்காரர்களின் உரிமைகள்
- வீட்டுக்காரர்களின் கடமைகள்
- குடித்தனக்காரர்களின் பொறுப்புகள்
- நியாய வாடகை
- வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்
- காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்
- வாடகையைக் கொடுக்கும் மற்றும் பெறும் முறை
- வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்
- வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்.
“வீட்டு உரிமையாளர்”, “குடித்தனக்காரர்”, ”குடியிருப்பு பகுதி”, ”கட்டிடப்பகுதி” இதுபோன்ற சொற்களுக்கு சட்டவிளக்கத்தை உள்ளடக்கி புரிந்துகொள்ள வேண்டும்.
வீட்டை வாடகை அல்லது குத்தகைக்கு விடும் வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரருடன் முறையான வாடகை ஒப்பந்தத்தை ஆவணமாக செய்துகொள்வது முறையானதாக இருக்கும். இருவருக்கும் இடையிலான ஒப்பந்தவிதிகளை எழுதிகொள்வதின் மூலம் இருவரும் வரையரைக்குட்பட்டு கட்டுப்பட்டு இருக்க அது உதவும்.
குடித்தனக்காரர் வாடகை ஒப்பந்தத்தில் என்ன வாடகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதைக் கொடுத்தாலே போதுமானது. மேலும் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கூறுவாறேயானால் அவர் அதை மூன்று மாதத்திற்க்கு முன்னரே தக்கக் காரணத்தோடு தெரியப்படுத்தவேண்டும். ஒப்பந்த காலகட்டத்திற்க்குள் ஒப்பந்தம் செய்துகொண்ட வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால் ஒப்பந்த காலம் வரை குடியிருக்க இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உரிமையிருக்கிறது. அதேபோல் வணிகக் கட்டிடமாக இருப்பின் தொழில் செய்பவர் வாடகைதாரராக இருந்தால் அவர் இறந்த பின் அவருடைய பங்குதாரர் இருப்பின் அவர் குடியிருக்க உரிமை உள்ளது. தக்கக்காரணமின்றி குடித்தனக்காரர் அனுபவித்துவரும் அடிப்படை வசதிகள் எதனையும் தடுத்து நிறுத்தவோ அல்லது நீக்கவோ உரிமையாளர் செய்யக்கூடாது.
- வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரரிடம் வாங்கும் மாதவாடகைக்கு பற்றுச்சீட்டு கொடுக்கவேண்டும். மேலும் வீட்டு வரிச் சுமைகளை குடித்தனக்காரர்களின் மீது செலுத்தக்கூடாது.
- வாடகை ஒப்பந்தத்தின் காலம் வரை அதற்கான வாடகை மாற்றப்படக்கூடாது காலி செய்ய கூறும் போது தக்க மூன்று மாத முன்னறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.
- வாடகைக் கட்டுப்பாட்டு சட்டக் கூறுகளைத்தாண்டி வேறுவிதமாக வெளியேற்றக்கூடாது.
- குடித்தனக்காரர் எந்தவித தேவைக்காக குடித்தனம் வந்தாரோ அந்தத் தேவைக்காக மட்டுமே அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தவேண்டும்.
- குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தாமல் தொடர்ந்து பூட்டிவைக்கக் கூடாது. மேலும் வேறு யாருக்கும் உள்வாடகைக்கு விடக்கூடாது. காலிசெய்வதற்கு முன் முறையான முன் அறிவிப்பு அறிவிக்கவேண்டும்.
நியாய வாடகை
- இதன் கீழ் வரும் கிளைப் பிரிவுகளுக்கு உட்பட்டு ஒரு கட்டிடத்தின் குடித்தனக்காரர் அல்லது வீட்டுக்காரர் அதற்கென மனுச் செய்து கொண்டால், தாம் தக்கதெனக்கருதும் ஒரு பரிசீலனையை நடத்திய பிறகு அத்தகைய கட்டிடத்துக்கு உரிய நியாய வாடகையினைக் கட்டுப்பாட்டாளர் நிர்ணயிக்கலாம்.
- குடியிருப்பதற்காகவுள்ள ஒரு கட்டிடத்தின் அடக்க விலையில் ஒன்பது சதவீதந்தான் அதனுடைய நியாய வாடகையாக இருக்க வேண்டும்.
- குடியிருப்பில்லாத ஒரு கட்டிடத்திற்குரிய நியாய வாடகை, அந்தக் கட்டிடத்தின் அடக்க விலையில் பன்னிரண்டு சதவீதமாக இருக்க வேண்டும்.
குறிப்பு
ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அதனதன் தரத்துக்கும், பரப்பளவுக்கும், விலைமதிப்புக்கும், அதில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளுக்கும் ஏற்ப, அதற்குரிய நியாய வாடகையைக் கேட்கும் உரிமை குடித்தனக்காரருக்கு மட்டுமின்றி வீட்டுக்காரருக்கும் இருக்கிறது.
குடித்தனக்காரர் அந்தக் கட்டிடத்துக்குரிய வாடகையை, வீட்டுக்காரருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய நாளுக்குப் பதினைந்து நாட்கள் சென்ற பிறகும் அல்லது அத்தகைய ஒப்பந்தம் ஏதும் செய்து கொண்டிராதபோது, ஒரு மாதத்தின் வாடகையை அடுத்த மாதக் கடைசி வரையில் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முன் வரவில்லையென்றால் அல்லது,
1). அந்தக் குடித்தனக்காரர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு வீட்டுக்காரரின் எழுத்து மூலமான அனுமதியின்றி,
அ).தமக்குள்ள குத்தகை உரிமையைப் பிறருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் அல்லது அத்தகைய உரிமை தமக்கு வழங்கப்படாதிருக்கும்போது அந்தக் கட்டிடம் முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை மற்றொருவருக்கு உள் வாடகைக்கு விட்டிருக்கிறார்.
அல்லது,
ஆ).அவ்வீடு எத்தகைய உபயோகத்துக்காக வாடகைக்கு விடப்பட்டதோ,
அதற்கு மாறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அல்லது,
2). அத்தகைய கட்டிடத்தின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதனைப் பாழ்படுத்தியிருக்கிறார் அல்லது பாழ்படுத்தப்படும்படி விட்டிருக்கிறார்.
அல்லது
3). ஒழுக்கக்கேடான அல்லது சட்டவிரோதமான காரியங்களுக்காக அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்துக்காக அமலில் உள்ள எந்தச் சட்டப்படியாவது அந்தக் குடித்தனக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். அல்லது,
4).அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களில் இருப்பவர்களுக்கும் அல்லது அந்தக் கட்டிடத்தின் வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும் தொல்லை தரக்கூடிய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கும் பொறுப்பாகிறார். அல்லது,
5).ஒரு மலை வாசஸ்தலம் அல்லாத இடத்தில் அந்தக்கட்டிடம் இருந்தால், அதில் தக்கக் காரணமின்றி, நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் குடியிருக்கவில்லை.
6).வீட்டுக்காரருக்கு அந்தவீட்டில் உள்ள உரிமையை மறுத்தும் தமக்கு அந்தவீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்கு உரிமை உண்டென்று கோரும் குடித்தனக்காரரின் மறுப்பும் கோரிக்கையும் நியாயமற்றவை.
என்பதைப் பற்றிக் கட்டுப்பாட்டாளருக்குத் தெளிவு ஏற்பட்டால், அந்தக் குடியிருப்பை (கட்டிடத்தை) வீட்டுக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிடலாம், அப்படி இல்லையெனில் அந்த விண்ணப்பத்தைத் தள்ளிவிடலாம்.
மேற்கூறிய காரணங்கள் இல்லாமல் குடித்தனக்காரரைக் காலிசெய்ய வைக்க முடியாது. காரணமின்றி வீட்டு உரிமையாளர் காலி செய்யுமாறு மிரட்டினாலோ அல்லது தொல்லை கொடுத்தாலோ வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிரந்தர உறுத்துக்கட்டளை வழக்கை (SUIT FOR PERMANENT INJUNCTION) தாக்கல் செய்து வாடகை நீதிமன்ற ஆணையின்றி தன்னைக் காலிசெய்யவைக்க முடியாது என்று வழக்காடலாம்.
வீட்டுக்காரர் வாடகைக்குரிய ரசீதை பணம் பெறும்போது அளிக்கவேண்டும்.
வீட்டுக்காரர் வாடகையை காரணமின்றி பெற மறுத்தால் வாடகைதாரர் 10 நாட்கள் நேரம் கொடுத்து வங்கி கணக்கு எண் மற்றும் பெயர் கேட்டு ஒரு அறிவிப்பை அறிவிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் வங்கியின் எண்ணை கொடுத்தால் ஒவ்வொரு மாத வாடகையையும் அந்த வங்கியில் செலுத்தவேண்டும். வங்கி எண்ணை வீட்டுக்காரர் தரமறுத்தால் மாத வாடகையை பணவிடைத்தாள் (MONEY ORDER) மூலம் செலவை கழித்துக்கொண்டு அனுப்ப வேண்டும். அனுப்பப்பட்ட தொகையை வீட்டுக்காரர் பெற மறுத்துவிட்டால் ஒவ்வொரு மாத வாடகையையும் வாடகைதாரர் வாடகை நீதிமன்றத்தில் செலுத்தி வரவேண்டும்.
வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகளை வழக்குரைஞர்களை அணுகித் தெரிந்துக்கொண்டு அவர்களுடைய உதவியுடன் வழக்கை தாக்கல் செய்து நீதியை பெற்றுக்கொள்ளலாம்.
ஆதாரம் : VIKASPIDIA
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath...
No comments:
Post a Comment