Spathodea companulata
உலகத்தின் மிக அழகான பூ மரங்களில் ஒன்றான பாசடி மரத்தை கோழிக்கொண்டை மரமென்றும் தமிழில் அழைக்கப்படுகிறது.
இதன் பூக்கள் சேவலின் கொண்டை போன்ற தோற்றத்தில் இளம் சிவப்பு வண்ணத்தில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.இவை ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட அயல்நநாட்டிலிருந்து இந்தியாவில் பரவிய மரமாகும்.
இந்த மரம் முதன் முதலாக 1787 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் கோல்ட் கோஸ்ட்
என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று கோல்ட் கோஸ்ட் என்பதுதான் கானா.அங்கோலா,எத்தோப்பியா,கானா,கென்யா,உகண்டா,சூடான்,தான்சானியா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
பின்னர் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, பீஜி, இந்தியா,ஜமைக்கா, பப்புவா நியூகினியா, போர்டோரிகோ, ஸ்ரீலங்கா, சான்சிபார் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பரவியுள்ளது.
வெப்ப மண்டல வறண்ட காடுகளில், 25 மீட்டர் உயரம் வரை வளரும்.பெரிய மரமாக அடிமரம் பருத்து வளரும்.
அடர்த்தியான நிழல் தரும் மரவகையான பாசடி மரங்களின் மரப் பலகை மிருதுவாக இருக்கும்.மரத்தில் பொந்துகள் அதிகம் விழுவதால் பறவைகள் வசிக்க ஏதுவான மரமிது.
பக்க கிளைகள் அதிகம் பரந்து விரியாமல் மரத்தின் தலைப்பகுதி செங்குத்தான நீள் கோள வடிவில் இருக்கும்.
அதனால் இந்தியாவில் இவை சாலை ஓரங்கள்,சாலையின் மத்தியில் உள்ள Median strip ஆகியவற்றில் நடவு செய்யப்படுகிறது. பெங்களூரு,சென்னை போன்ற நகரங்களில் இவை அதிகம் காணப்படுகிறது.
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை தோட்டப்பகுதிகள் மற்றும் காடுகளில் ஆங்காங்கே காணப்படுகிறது.
நிழலுக்காகவும் இதன் பெரிய கவர்ச்சியூட்டும் மலர்களுக்காகவும் இம்மரங்கள் கல்வி மற்றும் தொழிற்சாலை வளாகங்கள்,மற்றும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்றன.
கடைசல் வேலைகள் செய்வதற்கு ஏற்ற மரம் இது. கடைசல் வேலைகள் செய்ய முடியும் என்றால் தரமான மரம் என்று அர்த்தம். மேற்கு ஆப்பிரிக்காவில்
கடைசல் செய்து இந்த மரத்தில் ஏராளமான பொருட்களை தயாராகின்றன. ஐரோப்பா மற்றும்எத்தியோப்பியாவில் விறகு மற்றும் கரியாக பயனாகிறது. இந்த மரம் பிளைவுட் என்னும் ஒட்டு பலகைகள் தயாரிக்க உதவுகிறது.
இதற்காகவே பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை தோட்டப் பயிராக வளர்க்கிறார்கள்.ஒரு பலவீனமான காற்றுகூட இதன் கிளைகளை பலமாக உடைத்து முறித்துவிடும். அந்த அளவுக்கு இதன் கிளைகள் மென்மையானவை. இதன் வேர்கள் அதிக ஆழத்திற்கு செல்லாது. மேல் மட்டத்து மண்கண்டத்திலேயே பரவியிருக்கும்.
இதன் வயது 50 முதல் 150 ஆண்டுகள் ஆகும்.ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் இதன் விதைகளை சாப்பிடுகிறார்கள்.பல்வேறு விதமான நோய்களை கட்டுப்படுத்தவும் இதனை பயன்படுத்துகிறார்கள். மரத்தின் பட்டை, இலைகள் இவற்றைப் பயன்படுத்தி மலேரியா, எய்ட்ஸ் நோய், சர்க்கரை நோய், கைகால் வீக்கம், சீதபேதி, மலச்சிக்கல், வாயுத்தொல்லைகள, குடல் புண்கள், தோல் சம்பந்தமான நோய்கள்,காயங்கள், காய்ச்சல், சிறுநீரகக் கோளாறுகள், ஈரல் பாதிப்பு ஆகியவற்றை குணப்படுத்துகிறார்கள். விஷ முறிவுக்கும், மலேரியா மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்தவும்கூட இது பயனாகிறது.
இதன் இலைகள், பூக்கள், மற்றும் பட்டைகளில் இருந்து தயாரிக்கும் கசாயத்தை பயன்படுத்தி வேர்க்குரு தோலில் ஏற்படும் வீக்கம் சிறுநீரக கோளாறுகள், காயங்கள், இரத்தத்தில் தேங்கும் சக்கரை, ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்.
புதிய மரங்களை உருவாக்க இதன் விதைகள் மூலம் கன்றுகளை உருவாக்கி நடவு செய்யலாம்.
ஒரு கிலோ எடையுள்ள விதையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விதைகள் இருக்கும். பெரிய கிளைகளை வெட்டி நடலாம். வேர்ச்செடிகள் மூலமாகவும் புதிய மரங்களை உருவாக்கலாம். பொதுவாக வேர்ச்செடிகள் மூலமாக இயற்கையாகவே இம்மரங்கள்வேகமாகப் பரவும் குணம் கொண்டவையாகும்.
அரவிந்தன்
இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment