Wednesday, April 28, 2021

மரமல்லி அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Tree jasmine | பன்னீர் மரம்


          

       Millingtonia hortensis

மௌவல் எனச் சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி பன்னீர் மரம் எனவும் அழைக்கின்றனர். குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.


பன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதியில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.அதனால்  இந்த மரத்திற்கு இந்திய கார்க் மரம் எனவும் அழைக்கப்படுகிறது.

இதற்கான தாவரவியல் பெயரான மில்லிங்டோனியா ஹார்டென்சிஸ் என்ற பெயரில் உள்ள, மில்லிங்டோனியா என்ற சொல்லானது சர் தாமஸ் மில்லிங்டனின் நினைவாக இடப்பட்டது. இவர் இந்த இனத்தை முதலில் விவரித்த கார்ல் லின்னேயஸ் தி யங்கருக்கு உதவியாக இருந்தவர் எனப்படுகிறது. இதில் உள்ள 'ஹார்டென்சியா' என்ற சொல்லானது 'ஹார்டென்சிஸ்' மற்றும் 'ஹார்டஸ்' என்பதிலிருந்து உருவானது, இது லத்தீன் மொழியில் தோட்டத்துடன் தொடர்புடைய சொல்லாகும். 

இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பூ வருடத்திற்கு இரு முறை பூக்கும். மலர்கள் மிகுந்த வாசனையை கொண்டது. இப்பூவைக் கொண்டு மாலைகளும், மலர் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.இந்த மலர் இரவில் பூக்கும். மணம் மிக்கது.

இம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும். பல மண் வகைகளில் வளரக்கூடியவை.சற்று ஈரப்பதமான காலநிலயை விரும்பக்கூடியவை.

இதன் உயர்ந்த தண்டுப்பகுதியில் பக்க கிளைகளும் மேல் நோக்கி இருப்பதால் இதன் தலைப்பு பகுதி பிரமிட் அல்லது தூண் வடிவில் அமைந்திருக்கும்.இதன் மரமானது மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகவும்,மிருதுவாக எளிதில் உடையும் தன்மை கொண்டது.அதனால் பலமான காற்றுக்கு கிளைகள் உடைந்துவிடும்.

பொதுவாக, மரமல்லி மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள்.மேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், மரமல்லி மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம்.இந்த மரம் ஒரு அலங்கார மரமாக கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள பூக்களின் இனிய மணத்தால் தோட்ட மரமாக வளர்க்கப்படுகிறது

தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, மரமல்லி மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.

மரமல்லி மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் மரமல்லி மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.இதன் இலைகள் மலிவான புகையிலைக்கு ஒரு மாற்றுபொருளாக சிகரெட்டில்  சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது,

காய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர்.

பன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும்.

பன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது.

கும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.

இம்மரங்கள் விதைகள்,தண்டு துண்டுகள்,  வேர்குச்சிகள் மற்றும் பக்கக் கன்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....



No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...