ஆலமரம் | Banyan Tree
Ficus bengalensis
மரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தன்மை உடைய மரம் ஆலமரம். அகலமான உருவ அமைப்பு கொண்ட அகல்மரம், பின்னர் பெயர் மருவி ஆலமரம் என பெயர் பெற்றது.
ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. இந்த ஆலமரம் நூறு ஆண்டுகளுக்கும் மேல் வளரும் தன்மையுடையது.
அடுத்து, ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படியே முளைத்தாலும் அது பூக்காது, காய்க்காது, கனியாது என்பார்கள். ஏனென்றால், ஆலமரம் இருக்கும் இடத்தில் மற்ற செடிகள் ஓங்கி உயரவோ, வளரவோ முடியாது. அதுபோன்ற சக்தி கொண்டது ஆலமரம்.
அடுத்ததாக, ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண்டாலும் பல் துலக்கும் போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது.
குறிப்பாக ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி சொன்னது.
தவிர, ஆலமரங்கள் சில கோயில்களுக்கு தல விருட்சங்களாகவும் இருக்கிறது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து தவம் செய்தால் அனைத்தும் சித்தியாகும்.
மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும்.
ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு.
சில எல்லைத் தெய்வங்களுக்கு ஆலம் பழம் நெய்வேத்தியமாக இருக்கிறது. தவிர, ஆலமரங்கள் இருந்த இடத்தில் முனிவர்கள், சித்தர்கள் அமர்ந்து அந்தக் காலத்தில் தவம் செய்திருக்கிறார்கள். பொதுவாக குளிர்ச்சியான இடத்தைத் தேடி அவர்கள் உட்காருவார்கள். சாதகமான சக்தியையும் தரக்கூடியது ஆலமரம்.
மேலும், ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும். அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.
பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தப்படுவதில்லை , மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வமான உண்மை.
இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு. இந்த மரத்தடியில் ஊர்கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பார் என்று நம் முனோர் அறிந்திருந்தனர்.
பழங்காலத்தில் நாட்டை ஆண்ட அரசர்கள் ஆலமரம், அரச மரம், புங்கை மரம் ஆகியவற்றை சாலை ஓரங்களிலும், ஊர் எல்லைகளிலும் நட்டு வளர்த்தனர். அதன் பயனைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம். பல தலைமுறைகளைக் கடந்து காட்சி தரும் மரங்களில் ஆலமரத்துக்கு தனி கம்பீரம் உண்டு. அகன்ற ஒரு ஆலமரத்தை கிளைகளிலிருந்து விழுதுகள் தரையில் ஊன்றி மரத்திற்கு தாங்கும்.
விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எவ்வளவு பெரிய புயல்கள் தாக்கினாலும் சாயாத உறுதியை கொண்டது. அதனால்தான் என்னவோ அனைத்து பறவைகளும் அதில் தஞ்சமடைகின்றன. இந்தியாவின் தேசிய மரமும் இந்த ஆலமரம்தான். இந்த ஆலமரம் ஒரு கூட்டுக்குடும்பம் என்றும் சொல்லலாம். காகம், கிளிகள், குருவிகள், மைனா என பல இனங்களைச் சேர்ந்த பறவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தஞ்சம் அடையும் மரமும் ஆலமரம்தான். வேறு எந்த மர வகைகளிலும் அனைத்து பறவைகளும் குடியிருக்காது. இதற்கு ஆலமரங்களில் இருக்கும் பழங்களும் காரணம். ஆலமரத்துபழம் அனைத்து பறவைகளும் விரும்பி உணண ஏற்றது.
முன் காலத்தில் வீட்டுக்கு ஒரு ஆலமரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதன்பிறகு தெருவுக்கு ஒன்று, ஊருக்கு ஒன்று என்று எண்ணிக்கை குறைந்து விட்டன. இன்றைய நிலையில் 6 முதல் 8 கிராமங்களுக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் ஆலமரங்கள் காணப்படுகின்றன. சிறுவர்கள் விழுதுகளில் ஊஞ்சல் விளையாடி மகிழ்வதும் இந்த ஆலமரத்தில்தான்.
ஆலமரத்திற்கு கன்று தனியாக நட்டு வளர்க்க வேண்டிய அவசியமில்லை. பறவைகள் உண்ணும் பழத்தின் விதைகள் எச்சத்தின் மூலமாக வெளிப்பட்டு தானாக ஆலமரம் முளைக்கும். அப்படி முளைக்கும் இந்த மரக்கன்றுகள் சற்று உயரமாக வளரும் வரை அவற்றுக்கு ஈரப்பதம் தேவை.அதன் பின்னர் இது வறட்சியை தாக்கி வளரும் தன்மை கொண்டது.
இன்று பல்வேறு இடங்களில் ஆலமரங்கள் பாதுகாக்கப்படுகிறது. இதில் சற்று முக்கியமானது 'அடையாறு' ஆலமரம். கடந்த 450 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் பழங்காலம் தொட்டு பாரம்பர்யமாக கருதி வரும் ஆலமரங்கள் நாம் காக்க வேண்டிய பொக்கிஷங்கள்தான். நன்மை தரும் அனைத்து மரங்களையும் பாதுகாப்பதும் நமது கடமைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- அரவிந்தன்
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment