புளிய மரம் | Tamarind Tree
Tamarindus indica
பண்டைய காலங்களில், இன்று போல நிமிடத்திற்கொரு பேருந்து வசதிகள் இல்லை, அருகில் இருக்கும் ஊருக்கு செல்வதனாலும் சரி, தொலைதூர ஊர்களுக்கு செல்வதானாலும் பெரும்பான்மை மக்கள் எல்லோரும் கால்நடையாகத்தான் செல்வார்கள், அந்த சமயங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்த களைப்பு நீங்கி, சற்று ஓய்வெடுத்து செல்ல, அவர்களுக்கெல்லாம் இக்கால சாலையோர சிறு மோட்டல்கள் போல அக்காலத்தில் அமைந்தவைதான், நிழல் தரும் புளிய மரங்கள். பகலில் புளிய மரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் காற்று களைப்படைந்தவர்களை, புத்துணர்வூட்டி, நடையைத் தொய்வின்றித் தொடர வைக்கும்.
அக்காலங்களில், ஆன்மீகக் கருத்துகளை சொல்லும்போது, உலக விஷயங்களில், "புளியம் பழமும் ஓடும் போல இருங்கள்!" என்று குறிப்பிடுவார்கள், நன்கு பழுத்த புளியம் பழத்தின் சதை, அதன் ஓட்டில் ஒட்டாது விலகியே இருக்கும், அதுபோல, மனிதர்கள் உலகில் மக்களோடு கலந்து வாழ்ந்தாலும், உலக விசயங்களில் பற்றுக்களை விலக்கி வாழ்ந்து, நற்கதி அடையவேண்டும் என்பதே, இந்த சொலவடையின் பொருள்.
பாதசாரிகளுக்கு உதவும் வண்ணம் அக்கால ஆட்சியாளர்கள், சாலையோரங்களில் எல்லாம் நிழல் தரும் புளிய மரங்களை நட்டு வளர்த்தனர்.
புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, தமிழர் உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய பொருளாகவும் திகழ்கின்றன.
புளிய மரத்திற்கு அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி போன்ற பெயர்களும் உண்டு. இதன் தாயகம் இந்தியா என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் இம்மரத்தின் தாயகம் வெப்ப மண்டல ஆப்பிரிக்காவாக இருக்கும் எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
புளியமரம்
காடுகளில் தானாக வளரும். சாலை ஓரங்களில் இம்மரத்தை வளர்ப்பதும் உண்டு. ஆனால் தென்னை, மா, பலா, முந்திரி போன்ற மரங்களைப் போல் இம்மரத்தைப் பெரும் எண்ணிக்கையில் வளர்ப்பதில்லை. புளியமரம் பெரும்பாலும் நட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்த்துப் பயன்தரத் தொடங்குகிறது. இது 100 ஆண்டுகளுக்கு மேலும் உயிர் வாழக்கூடியது.
புளியமரம் 25 மீட்டர் உயரம் வளரும். 8-10 மீட்டர் சுற்றளவைக் கொண்டிருக்கும். இம்மரம் உறுதியானது. இதன் பக்கக் கிளைகள் பரவிக் காணப்படும். இவை எளிதில் முறிவதில்லை.
புளியமரத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம், ஓடு, விதை, பருப்பு, மரம் முதலியவை நன்கு பயனாகின்றன. புளியமரம் உறுதியானது. மரவேலை செய்யக் கடினமானது. சக்கரம், கொட்டாப்புளி, உலக்கை, செக்கு, உரல், கரும்பலகை முதலியவற்றைச் செய்ய இது பயன்படுகிறது. எரிதிறன் 4909 கிலோ கலோரி ஆகும். புளியமரத்தைப் பிளந்து விறகாக எரிக்கலாம். துப்பாக்கிக்கு உரிய வெடிமருந்துத் தயாரிப்பில் சிகிகரி பயனாகிறது.
மரப்பட்டையில் 7% மடனின் உள்ளது.
பட்டையிலிருந்து கோந்து வடியும், புளியமரத்தைக் காற்றுத் தடைக்காக வளர்க்கலாம். இதனை வளர்த்தால் மண் அரிப்பு உண்டாகாது.
புளியம் இலையைக் கொண்டு பட்டுத்துணிகளுக்குப் பச்சை நிறச் சாயம் தோய்க்கலாம். புளியம் இலையுடன் அவுரி நீலத்தைச் சேர்த்தால் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் கிடைக்கும்.
வீக்கம் கரையப் புளிய இலையை வதக்கிச் சூடு பொறுக்குமளவில் ஒற்றடம் கொடுத்த பின் கட்டுவதுண்டு. புளியம் இலை, வேப்பிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி அந்நீரைக் கொண்டு புண்களைக் கழுவ ஆறாதப் புண்கள் விரைவில் குணமாகும்.
பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தீரும்.
சித்த மருத்துவத்தில், புளிய இலை சிறந்த வலி நிவாரணியாக கூறப்படுகிறது.
மலேரியா போன்ற கொசுக்களால் ஏற்படும் விஷ சுரங்கள் விலக, புளிய இலைகளை நன்கு காய்ச்சி, பனை வெல்லம் சேர்த்து பருகிவர, காய்ச்சல்களின் வீரியம் குறையும், இரத்தம் சுத்தமாகும்.
புளியம் பிஞ்சுகளைச் சிறுசிறு துண்டுகளாக்கி உப்பில் ஊறவைத்து உண்பதுண்டு.
புளியம் பழங்களின் சுவை மரத்தின் வகைக்கு ஏற்பவும், விளையும் நிலப்பகுதிக்கு ஏற்பவும் இனிப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும்.
புளி விதைப் பொடியைத் துணித்தொழிற்சாலையில் பயன்படுத்துவர். ஜாம், ஜெல்லி, மார்மலேட் முதலியவற்றிற்குரிய ஜெல்லோஸ் தயாரிக்க இது உதவுகிறது. விதை புரதம் நிறைந்தது. இப்புரதத்தில் புரோலமின், குளுட்டெலின், ஆல்புமின் ஆகியவை உள்ளன.
புளிய விதை எண்ணெயைக் கொண்டு வர்ணங்கள் வார்னிஷ் இவற்றைத் தயாரிக்கலாம். விளக்கு எரிக்கலாம். புளியம் பருப்பிலிருந்து தயாரித்த பசையைக் கொண்டு பலகைகள் ஒட்டப்படுகின்றன. சிமெண்டைப் போல இது கெட்டியாக ஒட்டும். கசப்பான விதைத்தோல் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைப் போக்கும்.
விதையிலிருந்து அரைத்த பசையைக் கொப்புளங்களுக்குத் தடவலாம். கொட்டையினால் கழிச்சல், புண், நீர்க்கடுப்பு, வெள்ளை ஆகியவை போகும்.
புளியைக் கொண்டு பித்தளை, செம்பு பாத்திரங்களையும், இசைக் கருவிகளையும் துலக்கினால் அழுக்கு நீங்கி பளபளப்பான தோற்றம் கிட்டும். வெள்ளி நகை, பாத்திரங்கள் ஆகியவற்றிற்கும் வணிகர்கள் புளியைப் பயன்படுத்துவர்.
எண்பது அடிகள் வரை உயர்ந்து வளரும் புளிய மரங்கள், நூறாண்டுகள் வரை வாழும் தன்மை மிக்கவை, ஒட்டுச்செடியாக நட்டு வளர்ப்பதன் மூலம் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளில், காய்க்கத் தொடங்கிவிடும், வெப்ப மண்டல மரமான புளியமரத்திற்கு ஓரளவு வளர்ந்தபின் தண்ணீர் தேவையில்லை, வேறு எந்த பூச்சிகள் தொல்லையுமில்லை ஆயினும், குளிர் பிரதேசத்தில் மட்டும் இவை வளராது.
அரவிந்தன்
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment