Sunday, April 11, 2021

 வேம்பு | Neem Tree

          Azadirachta indica

நம்  முன்னோர்  இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்ததாலேயே ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கேற்ப நல்வாழ்வு வாழ்ந்தனர்.

நலம் தரும் மூலிகைகளை நாம் மறந்து விடாதிருக்கவே, அவற்றை இறைவழிபாட்டோடும் இணைத்து வைத்தனர். அப்படி சடங்குகளோடு இணைத்து வைக்கப்பட்ட ஓர் அற்புத மூலிகை மரமே வேம்பு.

தமிழகத்தில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் அம்மன் வழிபாட்டில் வேம்பு முக்கிய இடம் பிடித்திருப்பது பலரும் அறிந்ததுதான். இதற்குப் பின்னால் பல மருத்துவ காரணங்கள் உள்ளன. குறிப்பாக, கோடை காலத்தில் தோன்றும் அம்மை நோயிலிருந்தும், ஆடி மாதத்தில் தோன்றும் பல்வேறு தொற்றுகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும் கவசமாக அம்மன் வழிபாடு உள்ளது.

அம்மை நோய் ஒருவரை பாதிக்கும்போது அவ்வப்போது மஞ்சள் நீரில் வேப்பிலையைத் தோய்த்து நோயாளிகளின் மேல் தெளிப்பது வழக்கம். இதனால் அம்மை நோயால் ஏற்பட்ட எரிச்சல், நமைச்சல் கட்டுக்குள் வருவதோடு, நோயும் விரைவில் விட்டுப் போகும்.

வேப்பிலை பிரசாதமாக சேர்க்கப்படும் ‘கூழ் வார்த்தல்’ நிகழ்ச்சியின் மூலம் ஆடி மாதத்தில் ஏற்படும் பல்வேறு தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறோம்.நோயுற்றவர்கள் வீட்டிலும் பிரசவம் ஆன வீட்டிலும் நோய்க்கிருமிகள் அண்டிவிடாமல் வாயிற்படியிலேயே தடுத்து நிறுத்தும் பணியைச் செய்கிறது வேப்பிலை.

வேப்பமரம் வீட்டின் முற்றத்திலோ, தோட்டத்திலோ இருக்கையில் கார்பன்டை ஆக்ஸைடு என்கிற கரியமில வாயுவை அகற்றிப் பிராண வாயுவான ஆக்ஸிஜனை அதிகப்படுத்துவதற்கு பேருதவி புரிகிறது. தொற்றுக் கிருமிகளைத் தடுத்து நிறுத்துகிறது.வேம்பின் மருத்துவ மகிமை கருதியே தமிழ் வருடப்பிறப்பு  அன்று வேம்பின் பூக்களையும் கரும்பு, வெல்லத்தையும் சேர்த்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுப்பதோடு, இறைவனுக்கும் படைப்பது வழக்கமாக உள்ளது.

வேம்பின் மருத்துவ குணங்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் இதற்கு காரணம் இல்லை. வருகிற ஆண்டில் கசப்பான துன்பத்தையும் இனிப்பான இன்பத்தையும் சமமாகக் கருதி எதிர்கொண்டு நிம்மதியாக வாழ்வோம் என்ற உறுதியையும் வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான காரணம்.


தமிழகத்தில் வேப்பம்பூவை குழம்பாகவோ, துவையலாகவோ, ரசமாகவோ சமைத்து உண்ணுவது என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இது பல்வேறு நோய்களையும் தடுக்கவல்ல மருந்தாக விளங்குகிறது.

அரிசி, பருப்பு முதலிய உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும்போது, அதனுடன் வேப்பிலையைப் போட்டு வைப்பதால் பூச்சிகள் வராமல் தடுக்கப்படும்.

வேம்பு குறித்த அகத்தியர் பாடல்...‘கிருமிகுட்ட மாந்தங் கெடுவிடஞ்சுரங்கள் பொருமியம சூரிகையின் புண்கள் - ஒருமிக்கநிம்பத் திலையிருக்க நீடுலகில்நீங்காமல்கம்பத் திலையிருக்கக் காண்.’(அகத்தியர் குணபாடம்)கிருமி ரோகங்கள்.

வேப்பங்குச்சியில் பல் துலக்குவதால் பற்கள் வெண்மை பெறுவதோடு, ஈறுகளின் வீக்கம் கரைந்து பற்கள் கெட்டிப்படும். வாயிலுள்ள கிருமிகள் விரட்டப்பட்டு வாயின் துர்நாற்றம் விலகிப் பற்கள் ஆரோக்கியம் பெறும்.

வேப்பிலையை உலர வைத்து நெருப்பிலிட்டுப் புகைப்பதால் கொசுக்கள் விரட்டி அடிக்கப்படும். வேப்பெண்ணெயில் விளக்கெரிப்பதாலும் கொசுக்கள் அகலும்.வேப்பெண்ணெயை சிறிது நேரம் தலைக்குத் தேய்த்து வைத்திருந்து, தலைக்குக் குளிப்பதால், பொடுகுபோவதோடு தலைமுடி ஆரோக்கியம் பெறும்.

வேப்பெண்ணெய் ஓரிரு துளிகள் உள்ளுக்குச் சாப்பிடுவதால், ஈரலுடைய செயல்பாடுகள் தூண்டப்பட்டு, சீராகச் செயல்படச் செய்யும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமப்படுத்தவும் இயலும்.

வேப்பிலையை அரைத்து மேற்பூச்சாகப் பூசுவதனால் சொறி, சிரங்கு, படை, தேமல் போன்ற நோய்கள் நீங்கும்.

பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்கள் அலர்ஜி, காய்ச்சல் போன்றவைகளைக் கட்டுப்படுத்தவும், பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் வயிற்றுப்புழுக்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. இவற்றைப் போல் இருமல், காய்ச்சல், தோல் வியாதி, தொழுநோய், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் போன்றவைகளைக் கட்டுப்படுத்தவும் வேம்புவின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் தயாரிக்கப்படும் மூலிகை மருந்துப்பொருட்கள் பயன்படுவதால் இதனை சஞ்சீவி மூலிகைக்கு சமமாக சித்த மருத்தவத்திலும் மற்றைய மருத்துவ முறைகளிலும் கருதப்படுகிறது.

வேம்பு நல்ல வருவாய் தரக்கூடிய மரப்பயிராக இருப்பதால் இதனை வேளாண் காடுகளிலும்,தனி தோப்புகளாகவும் விவசாயிகளால் தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது.

வேம்பு இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடிய மர மூலிகைப் பயிராகும். மண் வகைகளாகிய மணல்சாரி முதல் களிமண் மற்றும் பாறை, சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள மண் பகுதிகளிலும் நன்றாக வளரும் இயல்புடையது.

தட்பவெப்பநிலையில் வேம்பு 20°செ முதல் 15°செ வரையிலான குறைந்த வெப்பநிலையிலும் நன்றாக வளரும் தன்மையுடையது. வேம்பு பயிரின் நல்ல வளர்ச்சிக்கு மழையளவு ஆண்டிற்கு 450 முதல் 1125மிமீ தேவை. இருப்பினும் வறட்சியான பகுதிகளிலும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையைக் கொண்டது.

தட்பவெப்ப நிலை மாற்றங்களினால் வேம்புவின் இலைகள் உதிர்தல், பூக்கள் கொட்டுதல் போன்றவைகள் சாதாரணமாக நடைபெறும். இதனால் பயிரின் வளர்ச்சியில் எந்த மாற்றமும் வருவதில்லை. புதிய அல்லது உதிர்வுக்குப்பின் தளிர் இலைகள் மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் உண்டாகும்.


ஜூன், ஜூலை மாதங்கள் நடவு செய்வதற்கு ஏற்ற மாதங்களாகும். இம்மாதங்களில் 60 x 60 x 60 செ.மீ. நீளம், அகலம், உயரமுள்ள குழிகளை 4 x 4 மீட்டர் இடைவெளியில் தயாரித்து தொழுஉரம், மேல் மண் ஆகியவற்றைக் கலந்து குழிகளை நிரப்பி, ஒரு மாத காலம் ஆறவிட வேண்டும். பின்பு பருவ மழை ஆரம்பித்ததும் விதை நாற்றுக்களைக் குழியின் நடுப்பகுதியில் நடவு செய்யவேண்டும். நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கழித்த பிறகு 8 X 10 க்கு என்ற இடைவெளி இருக்குமாறு ஒன்று விட்டு ஒன்று செடிகளை அகற்றிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் பயனாக மரங்களுக்கு தேவையான சத்துக்கள், சூரிய ஒளி நன்றாக கிடைத்து அதிக பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.


நாற்றுகள் நடவு செய்து ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் பூக்க ஆரம்பித்து விடுகின்றன. பூக்க ஆரம்பித்த இரண்டு - மூன்று மாதங்களில் மரம் ஒன்றிற்கு ஆண்டுக்கு 40 - 50 கிலோ பழங்களாகவோ அல்லது 20 - 30 கிலோ விதைகளாகவோ விளைச்சலைப் பெறலாம்.

                      அரவிந்தன்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...