Wednesday, April 7, 2021

சவுன்டல் மரம்| River tamarind Tree

 சவுன்டல் மரம்| River tamarind Tree

ஏரி, குளம், கால்வாய், சாலையோரம், அரசு புறம்போக்கு இடங்கள், தனியார் தோட்டங்கள்... என தமிழகத்தில் பார்த்த இடமெல்லாம் செழித்து வளர்ந்திருக்கும் சீமைக்கருவேலம் மரங்களுக்கு எதிரான பெரும் விழிப்புணர்வு அண்மையில் உருவாகியிருக்கிறது. 

நிலத்தின் ஈரப் பதத்தை உறிஞ்சி, தோட்டங்களை பயனற்ற பொட்டல்மேடாக மாற்றும் இந்த நச்சு மரங்களை அகற்றும் பணியில் பல்லாயிரம் மாணவர்களும் இளைஞர்களும் களம் இறங்கியிருக்கின்றனர். 

இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம். 



அதேவேளையில் மிகவும் ஏழ்மையில் வாழும் லட்சோப லட்சம் மக்களின் ஒரே எரிபொருளாக விளங்கி வரும் சீமைக்கருவேலம் மரங்களுக்கு மாற்று மரங்களை நட்டு வளர்ப்பது அவசர அவசியம். 

சீமைக்கருவேலம் மரங்களுக்கு மாற்றாக கோடிக்கணக்கில் வளர்க்கத் தகுந்த, பன்முகப் பயன்பாடுகொண்ட ஓர் அதிசய மரம் - சூபாபுல் அல்லது கூபாபுல் என்று அழைக்கப்படும் சவுண்டல் மரம். 

தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட சவுண்டல் மரம், தொன்மைமிக்க மாயன் இனத்தவர் போற்றி வளர்த்த அற்புத மரம். தற்போது வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் பல்கிப் பரந்துள்ளது சவுண்டல் மரம். 



சவுண்டல் மரத்தை வளர்ப்பது எளிது. ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு மரம் என்ற விகிதத்தில், ஒரு ஹெக்டேர் பரப்பில் பத்தாயிரம் சவுண்டல் மரங்களை சமூகக் காடுகளாக வளர்க்க முடியும். 

இளைப்பாற நிழல்தரும் மரம், மிகச்சிறந்த பசுந்தாழ் உரம், அற்புதமான தீவனம், எரிதிறன் மிக்க விறகு, உறுதியான பலகை மரம், காகிதக் கூழ் மரம், மண் அரிப்பைத் தடுக்கும் மரம், மழைதரும் மரம் - என சவுண்டல் மரத்தின் பயன்கள் ஏராளம், ஏராளம்.

மண்வளத்துக்கு மிகவும் அவசியமான நைட்ரஜன் சத்தினை மேல்மண் பகுதிக்கு வாரி வழங்குவதில் சவுண்டல் மரம் ஈடு இணையற்றது. சவுண்டல் மரத்தின் இலைதழைகள் மிகச் சிறந்த பசுந்தாழ் உரமாகப் பயன்படுகின்றன.

சவுண்டல் மரம் கால்நடைகளுக்கு அற்புதமான தீவனம். 25 சதவீதத்துக்கும் அதிகமான புரதச் சத்தும், பிற சத்துக்களும் நிறைந்த சவுண்டல் இலைகளை கால்நடைகள் விரும்பி சாப்பிடுகின்றன. ஒரு ஹெக்டர் பரப்பில் சவுண்டல் மரம் வளர்த்தால் ஓர் ஆண்டில் 20 மெட்ரிக் டன்  அளவுக்கு தீவனம் கிடைக்கிறது. சவுண்டல் இலைகளை தீவனமாக உட்கொண்ட மாடுகளின் பால் உற்பத்தி 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கிறது. 

சவுண்டல் மரம் மிகச் சிறந்த எரிதிறன் கொண்டது. விலை உயர்ந்த எரிபொருளான இயற்கை ஏரிவாயுவின் எரிதிறனில் 35 சதவீதம் வரை எரிதிறன் கொண்டது சவுண்டல் மரம். இயற்கை எரிவாயுவின் தயாரிப்பு  செலவில் 5 சதவீதத்துக்கும் குறைவான செலவில் சவுண்டல் மரங்களை வளர்க்கமுடியும். எரிபொருள் தேவையை சமாளிக்க, ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டங்களுக்குப் பதிலாக சவுண்டல் மரம் வளர்ப்புத் திட்டங்களை செயல்படுத்துவதே புத்திசாலித்தனமானது.

பலகை தயாரிப்புக்கு உகந்த 'ஏழைகளின் தேக்கு' சவுண்டல் மரம். தேக்கு மரத்துக்கு சற்றே குறைவான மதிப்புடையது என்றபோதும் 5 ஆண்டுகளில் 2 அடி விட்டமும் 20 மீட்டர் வரை உயரமும் கொண்டு அதிவேகமாக வளரக்கூடியது சவுண்டல் மரம். மர உபகரணங்கள் மற்றும்  அறைகலன்கள் தயாரிக்க உகந்த பலகைகளை மிகக் குறைந்த ஆண்டுகளில் வழங்கும் அதிசய மரம் சவுண்டல். 

50 சதவீதம் வரை கூழ்திறன் கொண்ட சவுண்டல் மரம், காகிதக் கூழ் உற்பத்திக்கும் மிகச் சிறந்த மூலப்பொருளாக கருதப்படுகிறது. காகித ஆலைகள், டன்னுக்கு ஆயிரம் ருபாய் விலைகொடுத்து சவுண்டல் மரங்களை வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் லட்சக்கணக்கில் சவுண்டல் மரங்களை வளர்த்தால் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வேலைவாய்ப்பு உருவாகிவிடும். 

பல்கிப் பெருகி வளர்வதில் சவுண்டல் மரம் ஈடு இணையற்றது. இந்தத் தன்மை காரணமாகவே, மண் அரிப்பைத் தடுப்பதில் சவுண்டல் மரம் மிகச் சிறந்த பாத்திரமாற்றுகிறது. வழிந்தோடும் மழைநீரில் 30 சதவீதம் நீரை மண்ணுக்குள் தேக்கிவைத்து, மெல்ல வெளியிடும் ஆற்றல் சவுண்டல் மரங்களுக்கு உண்டு. 

இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, மேகங்களை ஈர்த்து குளிர்வித்து மழையாகப் பொழியவைக்கும் ஆற்றல் சவுண்டல் மரக் காடுகளுக்கு உண்டு. ஒரு ஹெக்டேர் பரப்பில் 10,000 மரங்கள் என்ற அளவுக்கு சவுண்டல் மரங்கள் பல்கிப் பெருகி நிற்கும் நிலையில், அவை வெளியிடும் ஈரப்பதம் மிக்க காற்று மேகத்தைக் குளிர்வித்து மழையை வரவைக்கிறது. 

இப்படி ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும் சவுண்டல் மரக் கன்றுகளை மானாவாரி பகுதிகளில், சாலை ஓரங்களில், நீர்நிலைகளின் ஓரங்களில் கோடிக்கணக்கில் நடலாம். சீமைக் கருவேல மரங்களை அகற்றிய அனைத்து இடங்களிலும் சவுண்டல் மரக் கன்றுகளை நட்டு வளர்க்கலாம். 

 அரவிந்தன்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...